×

மரக்கடையில் திடீர் தீ: கட்டைகள் எரிந்து நாசம்: மின் கசிவு காரணமா?

ஊத்துக்கோட்டை, ஜன.29:  ஊத்துக்கோட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில்,  மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. இதற்கு மின்கசிவு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் சாலையில் வசித்து வருபவர் குமார் என்ற  செல்வகுமார் (50)  வியாபாரிகள் சங்க செயலாளர். இவர் அதே  பகுதியில் மின் வாரியம் எதிரே மரக்கடை  நடத்தி வருகிறார். இங்கு வீட்டிற்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் பொருட்கள்  செய்து தரப்படுகிறது. இந்நிலையில், செல்வகுமார்,  உறவினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் மரக்கடையை   மூடிவிட்டு மேலாளர்  வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மரக்கடை வளாகத்தில் மரங்களை அறுக்கும் இடத்தில் இருந்து திடீரென தீ புகை வெளியேறியது. தீ கொழுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.  இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து மரக்கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.  அவர் நாகர்கோவிலில் இருந்ததால் உடனே அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களுடன் கடை ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்க முற்பட்டனர்; ஆனால் முடியவில்லை. பின்னர், தேர்வாய் சிப்காட் பகுதி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.  தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது, தீயணைப்பு வண்டியில் இருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அதனால்,  தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலு, கிருஷ்ணய்யா ஆகியோர்  தலைமையில் 10 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து  தண்ணீர் பீய்ச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு  அணைத்தனர். மேலும், மரக்கடை வளாகத்தில்  கதவு, ஜன்னல் செய்ய அறுத்து வைக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும்  மரக்கட்டைகள் அனைத்தும் எரிந்து கரிக்கட்டைகளாக மாறி நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா