மயிலாடுதுறை ஒன்றியத்தில் பாதாள சாக்கடை பணியை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்

மயிலாடுதுறை, ஜன.29: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடையால் தொடரும் தொல்லைகள் மாதாமாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2009 முதல் நடைமுறைக்கு வந்த பாதாள சாக்கடை சேவையானது சிறுசிறு தொல்லைகளுடன் செயல்பாட்டில் இருந்தாலும் பாதாள சாக்கடைப் பணிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. 8 கழிவு நீரேற்று நிலையங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அப்பகுதி மக்களை துன்புறுத்துகிறது என்று நகர்மன்ற கூட்டத்தில் பேசப்பட்டது. சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு உகந்த அளவிற்கு வெளியே தண்ணீர் அனுப்பப்படவேண்டும் அந்த நீரைக்கொண்டு புல் வளர்க்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் சுத்திகரிக்கப்படாமலேயே, புல் வளர்க்காமலேயே சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. இதனால் ஆறுபாதி மக்கள் தங்களது நிலத்தடிநீரின் சுகாதாரத்தை இழந்து துடிதுடிக்கின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 3 பெரும் நீர்த்தேக்க குளங்களில் முதல் குளத்தில் மணல் சேர்ந்து தூர்ந்து வருகிறது, இதுவரை அவற்றை சரிசெய்யவில்லை, அவ்வப்பொழுது ஆள்நுழைவுத் தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் வழிவது வாடிக்கை அவற்றை எதிர்த்துப்போராடி சரிசெய்துவந்தனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை மறக்கும் அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 அடி முதல் 25 அடி ஆழத்தில் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக குழாய் மேல் உள்ள மணல் கரைந்து குழாய் வழியாக செல்லும்போது மணல் கரைந்த இடத்தில் உள்ள சாலை அப்படியே உள்வாங்கியது. முதன் முதலாக கச்சேரி சாலையில்தான் இந்த சாலை உள்வாங்கும் நிலை ஏற்பட்டது. கச்சேரி சாலையை தொடர்ந்து தரங்கைச் சாலை, கிளைச்சிறைச் சாலை சாலை, அய்யாரப்பர் ஆலய கீழவீதி, மேலவீதி போன்ற இடங்களில் இதுபோன்ற குழாய்கள் உடைப்பு ஏற்பட்டபோது நகரில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி நகரையே நாறடித்து வருகிறது. இந்த உடைப்பால் சாலை போக்குவரத்து திருப்பப்படுவதும், துண்டிக்கப்படும் வாடிக்கையாக இருந்தது. தரங்கைச் சாலையில் போக்குவரத்து திருப்பப்படும்போது தருமபுரம் சாலையில் வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் திருப்பப்பட்டது. இதனால் தருமபுரம் சாலை, மகாதானத்தெரு சாலை உட்பட 5 கி.மீ தூரத்திற்குச் சாலைகள் உடைந்து குண்டும் குழியுமாக மாறியது. மழைக் காலமாக இருந்தபோது பல்வேறு இன்னல்கள், அனுபவித்த தருமபுரம் பகுதி மக்கள் திடீர் திடீர் என்று சாலைமறியல் போராட்டமும் நடத்தினர். தரங்கைச் சாலையில் சென்றமுறை பள்ளம் ஏற்பட்டபோது, வாகனங்கள் மகாதானத் தெரு வழியாக தரும்புரம் சாலையில் திருப்பிவிடப்பட்டபோது பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டதுடன், அரசு அதிகாரி ஒருவர் மகாதானத்தெரு சாலைவிபத்தில் ஒரு காலை இழந்தார். உடனே அந்த சாலையை சரிசெய்கிறேன் என்று நகராட்சி நடவடிக்கையில் இறங்கினாலும் எந்த முடிவும் எட்டப்படாமல் சாலை அப்படியே கிடக்கிறது.

நேற்று தரங்கைச் சாலை ஆர்டிஓ குடியிருப்பு பகுதிக்கு முன்பாகவே சாலையில் பள்ளம் ஏற்பட்டு சாக்கடைநீர் அடைத்துக் கொண்டது. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் கழிவுநீர் ஆள்நுழைவுத் தொட்டியிலிருந்து வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் தேங்க உள்ளது. தருமபுரம் ஆதீனம் மடம் வழியாக மேற்குநோக்கி தருமபுரம் சாலையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு மயிலாடுதுறை மகாதானத்தெரு வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தருமபுரம் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து நகரில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் தேங்கியிருக்கும் அடைப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும், உடைந்துபோன குழாயை சரிசெய்யவேண்டும். நகராட்சி அனுமதி இல்லாமல் ஆயிரக்கணக்கான பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மயிலாடுதுறை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Mayiladuthurai Union ,
× RELATED பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்களை மூடாததால் வாகன ஓட்டிகள் அவதி