×

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் வனத்துறை அதிகாரி தகவல்

திருவில்லிபுத்தூர், ஜன. 29: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய கணக்கெடுப்பு வருகிற பிப்ரவரி மாதம்  நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை பொறுத்தவரை புலிகள் சிறுத்தைகள் கரடிகள் காட்டெருமைகள் யானைகள் நரிகள் செந்நாய்கள் மற்றும் புள்ளிமான்கள் என ஏராளமான வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. இவற்றோடு இந்த பகுதியில் தான் அதிக அளவு சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கணக்கெடுப்பின்போது வனவிலங்கு எண்ணிக்கையை துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கணக்கெடுப்பின்போது வனப்பகுதியில் புதுவிதமான அனுபவம் கிடைப்பதால் வனத்துறையினர் மட்டுமன்றி, கல்லூரி மாணவர்கள், வன ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை, ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிவகாசி, குன்னூர், வத்திராயிருப்பு, புதுப்பட்டி, பிளவக்கல் அணை, மம்சாபுரம் மதுரை மாவட்டம் சாப்டூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வருகிற பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பில் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி வனவிலங்குகளை துல்லியமாக கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு வனவிலங்குகளின் சத்தங்கள், காலடித்தடங்கள், எச்சங்கள் மற்றும் மறைந்திருந்து பார்ப்பது என பல்வேறு வகைகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. மேலும் புலிகளுக்காக தனியாகவும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...