×

போடி-மதுரை அகல ரயில்பாதை பணி திமுக முயற்சியால் துரிதமாக நடக்கிறது அதிமுக எம்பி.க்கு முன்னாள் அமைச்சர் பதில்

போடி, ஜன.29: போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டம் திமுக முயற்சியால்தான் துரிதமாக செயல்படுகிறது என்று, முன்னாள் அமைச்சர் தங்கவேல் தெரிவித்தார். போடி வள்ளுவர் சிலை திடலில் போடி நகர ஒன்றிய திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மாவீ.செல்வராஜ் தலைமை வகித்தார்.  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், ஜெயராஜ், பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் மயில்தாய் அன்புச்செழியன், நகர அவைத்தலைவர் சின்னத்துரை, ஒன்றிய அவைத்தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நடேசன் வரவேற்றார். போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் பேசினார்.  முன்னாள் திமுக அமைச்சரும் முன்னாள் எம்பியுமான தங்கவேல் கூறுகையில், ‘‘தண்டவாளங்கள் பிடுங்கப்பட்டு போடி-மதுரை ரயில்வே பணிகள் முடங்கி நாதியற்று நாடி துடிப்பு இல்லாமல் கிடந்தது.

 வர்த்தகங்கள் முடங்கியதால் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். நான் எம்பியாக இருந்த நேரத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து நிலையினை விளக்கி, பணிகள் துரிதமாக செயல்படுவதற்கு கலைஞர் மற்றும் ஸ்டாலின் சார்பான அழுத்தம் கொடுக்கப்பட்டது.தற்போது உசிலம்பட்டிக்கு சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார், ரயில்வே பணிகள் தனது முயற்சியில் நிறைவேற்றியதாக பேசியிருக்கிறார். 6 மாதத்திற்குள் எப்படி எந்த அடிப்படையில் செய்தார்.  இன்னொருவரின் பிள்ளைக்கு நான்  தகப்பன் என்றால் யார் ஏற்றுக் கொள்ள முடியும்? போடி தொகுதி மக்களை ஏமாற்ற முடியாது. மக்களுக்கு தெளிவாக தெரியும்’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர ஒன்றிய அளவிலான திமுகவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டார். நிறைவாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

Tags : Bodi-Madurai ,DMK ,AIADMK ,minister ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...