×

ஆப்பனூர் அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

சாயல்குடி, ஜன.29:  ஆப்பனூர் அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலாடி அருகே ஆப்பனூர் பஞ்சாயத்து தலைவர் புஷ்பம், துணை தலைவர் குமார் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கடலாடி ஒன்றியத்தில் ஆப்பனூர் பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. இதில் அரியநாதபுரம், தெற்குகொட்டகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. ஆப்பனூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளி படிப்பிற்காக இப்பஞ்சாயத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கடலாடிக்கு சென்று படித்து வருகின்றனர். போதிய பேருந்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளிக்கு சென்று வருவதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே உயர்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் கால்நடை அதிகம் வளர்த்து வருகின்றனர். எனவே கால்நடை மருத்துவமனை வேண்டும். அரியநாதபுரம், இந்திரா நகருக்கு அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், எல்.இ.டி பல்பு கொண்ட உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். மின் கம்பங்கள் கடந்த 1963ல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்பு கூடாக உள்ளது. மின்வயர்களும் தாழ்வாக செல்வதை விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும்.

பேருந்து நிறுத்தத்திலிருந்து கிராமத்திற்குள் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையிலுள்ள பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி வருகிறது.
சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சகதியாக மாறிவிடுகிறது. இதன் வழியே வாகனங்கள் செல்லும்போது வாகனங்கள் பதிந்து கொள்கிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்து தரவேண்டும். மேலும் அரசு பள்ளி, கிராமத்திற்கு, விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறன் குறையும் நிலை உள்ளது. எனவே அரசு சார்பில் மைதானத்திற்கு நிலம் வழங்கவேண்டும். பெண்கள் சுகாதார வளாகம், மகளிர் குழு கட்டிடங்கள் சேதமடைந்து கிடக்கிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Appanoor Government High School ,Secondary School ,
× RELATED கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா