சமயநல்லூர் நான்குவழிச்சாலையில் ஹைமாஸ் விளக்குகள் சீரமைப்பு

வாடிப்பட்டி, ஜன. 29: தினகரன் செய்தி எதிரொலியாக சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச்சாலையில், நீண்ட காலமாக எரியாமல் இருந்த ஹைமாஸ் விளக்குகள் சீரமைக்கப்பட்டு எரியத் தொடங்கியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச்சாலை வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக விளங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகருக்கு செல்லும் வாகனங்களும், மதுரையிலிருந்து திண்டுக்கல், விருதுநகர் வழியாக செல்லும் வாகனங்களும் இந்த நான்குவழிச்சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாமல், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தன. இதையடுத்து சமயநல்லூர் நான்குவழிச்சாலையில் நான்கு இடங்களில் ஹைமாஸ் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மின்விளக்குகளுக்கான மின்கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில், கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மின்விளக்கு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஹைமாஸ் மின்விளக்குகள் பயன்பாடின்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. இது குறித்து நமது தினகரன் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு, மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக 4 ஹைமாஸ் விளக்குகளில் தற்போது 2 ஹைமாஸ் விளக்குகளை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சீரமைத்து, எரியத் தொடங்கியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல, மதுரையிலிருந்து தேனூர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள், திண்டுக்கல் நான்குவழிச்சாலையை அடையும் முக்கியமான வளைவு பகுதியிலும், திண்டுக்கல் நான்குவழிச்சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச்சாலை மற்றும் மதுரை மெயின் ரோட்டை வந்தடையும் பகுதியில், சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விபத்துகளை தடுக்க கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: