×

ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவனத்திற்கு பருத்தி அறுவடை இயந்திரத்திற்கு 50 சதவீதம் மானியம்

ஒட்டன்சத்திரம், ஜன. 29: ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளுக்கு பருத்தி அறுவடை இயந்திரம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 2800 ஹெக்டேர் பரப்பளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி செடியின் பஞ்சு எடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பருத்தி அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. பருத்தி அறுவடை செய்வதற்கு அதிக கூலி கொடுத்தாலும், கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. இதை தடுக்க பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் பருத்தி அறுவடை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்த இயந்திரமானது 12 வோல்ட்டு மின்சாரத்தை சேமித்து வைத்து, 8 மணிநேரம் வேலை செய்யக்கூடியதாகும். தொழிலாளர்கள் கையாளும் வகையில் 600 கிராம் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை தாங்கிய மைய இடுப்பு பகுதியில் கச்சையில் இருக்கமாக அணிந்து கொண்டு, பருத்தி சேகரிக்கும் பையை இடுப்பில் பின்பக்கம் இருக்குமாறு கட்டி, விசை பட்டனை அழுத்தினால் பருத்தி கருவியால் இழுக்கப்பட்டு, பையில் சேகரிக்கப்படும் இத்தகைய அறுவடையில் இலைச்சருகல் சேராது. ஒருநபர் ஒரு மணிநேரத்திற்கு 15 கிலோ முதல் 20 கிலோ பருத்தி எடுக்க முடியும்.

இக்கருவியானது பேட்டரி மூலம் செயல்படுவதால் சார்ஜ் செய்யும் வசதியுடன் இதர உபகரணங்களும் ஒரு வருட வாரன்டியுடன் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சூல் சேமிக்கப்பட்டு, விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது. வேளாண்மை துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (பருத்தி) 2019 - 2020-ன் கீழ் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.3500 மானியத்தில் இக்கருவி வழங்கப்படுகிறது. இதன் முழு விலை ரூ.7,840 ஆகும். இக்கருவியின் பயன்பாடு குறித்து சத்திரப்பட்டியில் செயல்விளக்கத்தினை விவசாயி அழகியணன் வயலில் சிபா ஆராய்ச்சிக் கழக அலுவலர் ஆரோக்கியசாமி செயல்விளக்கம் அளித்தார். எனவே இக்கருவி தேவைப்படும் விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வேளாண்மை துறையினரை அணுகி மானிய விலையில் பெற்று கொள்ளுமாறு வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...