×

நடைக்காவு பகுதியில் போலி பதனீர், கள் விற்ற 3 பேர் கைது மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

மார்த்தாண்டம், ஜன.29:  மதுவிலக்கு போலீசார் சோதனையில் போலி பதனீர், கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். தக்கலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் எஸ்ஐ ராஜரத்தினம் மற்றும் போலீசார் நேற்று கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு உள்பட தமிழக - கேரள எல்லையோர பகுதியில் சோதனை நடத்தினர். நடைக்காவு பகுதியில் கள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை
நடந்தது.அப்போது நடைக்காவு பகுதியில் ஒரு கும்பல் நுங்கு குலைகளுக்கு இடையில் கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதற்காக ஒருலிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் கள் நிரப்பி வைத்திருந்தனர். போலீசார் விசாரித்த போது பதனீர் விற்பனை செய்வதாக கூறினர். போலீசார் சோதனையில், அவர்கள் வைத்திருந்த பதனீரில் கோல்டு மோஹர் எனப்படும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 70 லிட்டர் கள், சுமார் 100 லிட்டர் ரசாயனம் கலந்த பதனீர், நுங்கு மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அய்யனார் கோயில் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (27), காமராஜர் நகர் கருப்பசாமி(37), செல்லத்துரை(43) என்பது தெரியவந்தது. அவர்கள் கோல்டு மோஹர் ரசாயனத்தை தென்காசியில் இருந்து வாங்கியுள்ளனர். ஒரு குடம் தண்ணீரில் 10 கிராம் ரசாயனத்தை சேர்த்தால் நல்ல இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதனை பதனீருடன் சேர்த்து விற்பனை செய்துள்ளனர். நுங்கு பதனீர் கேட்பவர்களுக்கு இந்த பதனீரில் நுங்கு சேர்த்து பனை ஓலை பட்டைகளில் ஊற்றி இயற்கை பொருள் போன்று விற்பனை செய்துள்ளனர். பின்னர் இந்த பதனீரில் இருந்து கள் எடுத்து, அதனை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளனர்.இதற்காக ஊரம்பு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். சுற்றுவட்டார பகுதி பனைகளில் இருந்து பதனீர் மற்றும் நுங்கு இறக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Liquor police ,persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...