கடையநல்லூர் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

கடையநல்லூர், ஜன. 29: கடையநல்லூரை அடுத்த திரிகூடபுரத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீசார் பத்திரமாக மீட்டனர். திரிகூடபுரம் பூலித்தேவன் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் அன்புசெல்வன் (25). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை வயதில் மணீஷ், ஒன்றரை வயதில் முகில் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக வசந்தி, குழந்தைகளுடன் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆராய்ச்சிபட்டிக்கு சென்று விட்டார். அங்கிருந்து வசந்தி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அன்புசெல்வன் போனில் தொடர்பு கொண்ட போது குழந்தைகளுடனும் பேச விடாமல் மனைவி வசந்தி தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அன்புசெல்வன், நேற்று மதியம் திடீரென திரிகூடபுரம் சாரதா மணி தெருவில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார் தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த சொக்கம்பட்டி எஸ்ஐ வேல்பாண்டி, தனிப்பிரிவு ஏட்டு மருது தலைமையிலான போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அன்புசெல்வனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக பேசி அவரை கீழே இறங்க செய்தனர். பின்னர் அன்புசெல்வனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரைகளை வழங்கி தந்தை மாரியப்பனுடன் அனுப்பி வைத்தனர். கணவன் -மனைவி தகராறில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : cell tower ,Kadayanallur ,
× RELATED செம்பாக்கம் குடியிருப்பு பகுதியில்...