×

கடையம் குளக்கரையில் குவியும் கோழி கழிவுகள் தொற்றுநோய் பரவும் அபாயம்

கடையம், ஜன. 29: கடையம் அய்யம்பிள்ளை குளம் பகுதியில் கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. கடையத்தில் இருந்து முதலியார்பட்டி செல்லும் வழியில்  அய்யம்பிள்ளை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தின் கரையில் பிராய்லர் கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் சாக்கு பைகளில் நிரப்பி கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் நிரம்பிய சாக்குபையை நாய்கள் கிழித்து குளக்கரை முழுவதும் கழிவுகளை சிதறடிக்கின்றன. மேலும் அவற்றை தின்று குளத்து தண்ணீரில் உருண்டு புரளுகிறது. இந்த குளத்தில்தான் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளும் தாகம் தீர்க்கின்றன.தொடர்ந்து குவிக்கப்படும் இறைச்சி கழிவுகளால் சுற்றுப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இப்பகுதியில் திரியும் நாய்களும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சுகாதாரத்தை கெடுக்கின்றன.

சீனாவில் உயிர்களை பலிவாங்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம், தற்போது கேரளாவிலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி தொற்றி உள்ளது. இந்த குளம், கடையம் -அம்பை சாலையில் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வாகனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டு கழிவுகள் கொட்டப்படுகிறதா? அல்லது உள்ளூர் கடைகளில் இருந்து கொட்டப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குவிந்து கிடக்கும் கழிவுகளையும் அப்புறப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : stall pond ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா