×

செங்கம் தாலுகாவில் விண்ணப்பித்தும் தகுதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காத அவலம் இடைத்தரகர்களால் முதியோர், விதவைகள் வேதனை

செங்கம், ஜன.29: செங்கம் தாலுகாவில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும், இடைத்தரகர்களால் தகுதிஉள்ளவர்களுக்கு கிடைக்காமல் உள்ளதாக முதியோர், விதவைகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கம் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை, விதவைகள், குடும்ப தலைவரை இழந்து வறுமையில் வாடும் பெண்கள், அரசு அறிவித்த அணைத்து உதவிகள் மற்றும் முறையான ஆவணங்கள் செலுத்தினாலும் அவர்களுக்கு இன்று வரையில் உதவித்தொகை கிடைக்கவில்லை. மேலும், உதவித்தொகை கிடைக்க விதவை சான்று பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு சான்று பெற விண்ணப்பித்தாலும் இடைத்தரகர்கள் ₹5 ஆயிரம் முதல் ₹6 ஆயிரம் வரை வழங்கினால் மட்டுமே பல மாதம் கழித்து சான்று மற்றும் உதவித்தொகை பெற முடியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதியோர் மற்றும் குடும்ப தலைவரை இழந்து நிற்கும் பெண்கள் இடைத்தரகர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால், அவர்கள் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், அனைத்து சான்றுகளும் பெற கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், துயர் துடைப்பு வட்டாட்சியர் என கோப்புகள் நகர்ந்து சென்று வர வேண்டிய நிலையில் விண்ணப்பித்தவர்களின் பட்டியலுடன் இடைத்தரகர்கள் பேரம் பேசும் அவலம் செங்கம் தாலுகாவில் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று வரையில் இழுப்பறி நிலைதான் உள்ளது. ஆனால், இடைத்தரகர்கள் முலம் செல்லும் விண்ணப்பங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது என தகுதியுடைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் செங்கம் தாலுகா அளவில் முதியோர் மற்றும் விதவைச்சான்று மற்றும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு தனியாக ஒரு முகாம் ஏற்பாடு செய்து அவர்கள் தகுதி உள்ளவர்கள் என தெரிந்தால் உதவித்தொகை ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : seniors ,widows ,Chengam Taluk ,
× RELATED கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12...