தாரமங்கலம் அருகே மானத்தாள் கிராமத்தில் ரயில்வே பாலம் கட்டுமானம் தாமதத்தால் மக்கள் அவதி

தாரமங்கலம், ஜன.29:  தாரமங்கலம் அருகே பள்ளி குழந்தைகள் ஆபத்தான நிலையில் ரயில்வே பாதையை கடக்கும் நிலையில், அசம்பாவிதம்  நிகழும் முன்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மானத்தாள் கிராமம் கரட்டூர் வழியாக சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில்வே பாதை பல ஆண்டுகளாக சேவையில் இருந்து வருகிறது. தற்போது, இந்த வழியாக இருவழி ரயில்வே பாதை பணி நடைபெற்று வருகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள சிற்றூர்களான மானத்தாள் மற்றும் கோவிலூர், உடையான்குறை, மோட்டூர், கண்காணிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு இந்த ரயில்வே பாதையை கடந்து கரட்டூர் பகுதிக்கு வந்து பேருந்து மற்றும் அனைத்து தேவைகளையும் அடைய வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, பணியை விரைந்த முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அங்கன்வாடி முதல் கல்லூரி வரையிலும் படிக்க கூடிய குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவிகள் அனைவரும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து தான் தினசரி ஆபத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அவ்வப்போது சிறு சிறு விபத்துக்களிலும் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ரயிலில் சிக்கி  பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தயார் நிலையில் உள்ள பத்துக்கு பத்து அளவு கொண்ட ரெடிமேட் கான்க்ரீட் பாலத்தை வைத்து பாதுகாப்பான பாதையை உருவாக்கி கொடுத்து அசம்பாவிதம் நிகலாமல் தடுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: