×

போதை பொருட்களை பதுக்கி விற்ற 20 கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்

சேலம், ஜன. 29: சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் விற்ற 20 கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பழக்கம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குட்கா, பான்பராக் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தட்டுப்பாடியின்றி கிடைத்து வருகிறது. பெங்களூரில் இருந்து காய்கறி லாரிகளில் குட்கா கடத்தி வந்து சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள  குடோன்களுக்கு ரகசியமாக கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் பதுக்கி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள மளிகை, பெட்டி கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் அல்லிகுட்டை, பொன்னம்மாப்பேட்டை, ஆத்தூர்,சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், சங்ககிரி, மேட்டூர், மேச்சேரி, சேலம் நெத்திமேடு, தாதகாப்பட்டி, செவ்வாய்பேட்டை, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள 33 கடைகளில் சோதனை நடந்தது.
இதில், 20 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்(ஹான்ஸ்) பதுக்கி விற்றது கண்டறியப்பட்டது. 13 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து  உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில்,‘‘தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்வதை துரிதப்படுத்தியுள்ளோம். கடந்த 24,25ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 20 கடைகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி விற்ற கண்டறிந்து, இந்த கடைகளுக்கு தலா ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 13 கடைகளுக்கு ₹26 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 2 தடவைக்கு மேல் போதை பொருட்கள் விற்றால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்,’’ என்றார்.

Tags : shops ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ