கலப்பட வெல்லம் தயாரித்த 8 பேர் மீது வழக்கு

சேலம், ஜன. 29: சேலத்தில் கலப்பட வெல்லம் தயாரித்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை  மூலப்பிள்ளையார் கோயில் பகுதியில் வெல்லம் ஏல மண்டி உள்ளது. இந்த மண்டிக்கு தினமும்ஓமலூர், கருப்பூர், இடைப்பாடி காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெல்லம் மினி லாரிகளில் கொண்டு வந்து ஏலம் விடப்படுகிறது.  தமிழகம், ஆந்திராவில் இருந்து வியாபாரிகள் பலர் இந்த மண்டிக்கு வந்து வெல்ல மூட்டைகளை ஏலம் எடுத்து செல்கிறார்கள். இந்த ஏல மண்டிக்கு வரும் வெல்லத்தில் கலப்படம் இருப்பாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார்கள்  வந்தது.

 இதையடுத்து கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வெல்லம் மண்டிக்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஏல மண்டிக்கு 42 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெல்லத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்,  23 வாகனங்களில் இருந்தது கலப்பட வெல்லம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 41 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  23 மாதிரிகள் உணவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு மையத்திற்கு     அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில்  மாதிரிகள் 8 தரமற்றது என தெரியவந்தது. தொடர்ந்து அனைத்து பரிசோதனையின் அறிக்கைகள் விரைவில் வெளிவரும். தற்போது அறிவிக்கப்பட்ட  அறிக்கையின் அடிப்படையில்  வெல்லம் தயாரித்த உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகரிரகள் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெல்லத்தில் சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சர்க்கரை, மைதா, சூப்பர் பாஸ்பேட் கலக்கப்படுறது. கடந்த நவம்பர் மாதம் நடந்த சோதனையில், 23 மாதிரிகள்,  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், 8 தரமற்றது என தெரிய வந்துள்ளது. இந்த வெல்லத்தை தயாரித்த உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பரிசோதனையும் விரைவில் வெளி வரும். அந்த அறிக்கை கிடைத்தவுடன் கலப்பட வெல்லம் தயாரித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Related Stories: