×

நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் திடீர் ஆய்வு எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்க பரிசீலனை

நாமக்கல், ஜன.29: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று மாலை ரயில்வேயில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். அவரை நாமக்கல் எம்.பி. சின்ராஜ் வரவேற்றார். ரயில்வே ஸ்டேஷனில் புதியதாக கட்டப்பட்ட பூங்கா மற்றும் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முன்பதிவு மையம், புதிய சரக்கு அலுவலகம், எல்.இ.டி. முன்அறிவிப்பு பலகை ஆகியவற்றை பொது மேலாளர் திறந்துவைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் வழியாக புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். இப்பகுதியில் உள்ள ரயில் நிலையங்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர், அரியலூர் வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் இதுவரை இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக என ஆய்வு செய்யப்படும். எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்கவேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அது பற்றி பரிசீலனை செய்யப்படும். சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வரையிலும் இரட்டை ரயில் பாதை அமைக்க சர்வே செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பொது மேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார். ஆய்வின்போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், முதன்மை வணிகம் மேலாளர் பிரியம்வதா விஸ்வநாதன், முதன்மை இயக்கம் மேலாளர் நீனு இத்ரேயா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Emergency Inspection ,Namakkal Railway Station ,
× RELATED அடிப்படை வசதிகள் முழுமையாக...