×

சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தத்தெடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மற்றும் நிர்மலா குழந்தைகள் தத்தெடுப்பு மையம் சார்பில், குழந்தை தத்தெடுப்பு விதிமுறைகள்-2017 மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த கருத்தரங்கு மற்றும் செவிலியர் பயிற்சி முகாம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தர்மபுரி கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளர் சுஜாதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஜெமினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், நிர்மலா குழந்தைகள் தத்தெடுப்பு மைய கண்காணிப்பாளர் சுப்பிரியா, நிர்மலா ஒருங்கிணைந்த வளாக மேலாளர் மேரி ஜெனிவி, இளஞ்சிறார் நீதிக்குழுமம் ரவி, குழந்தை நலக்குழுதலைவர் சரவணன், நன்னடத்தை அலுவலர் குணசேகரன் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மலர்விழி பேசுகையில், குழந்தைக்கு இரண்டு விதமான பெற்றோர் இருப்பது சாத்தியமான ஒன்று. பெற்றெடுத்த தாய், தந்தையர் மற்றும் சூழ்நிலை காரணமாக பெற்றெடுத்த தாய் தந்தையர்களால் வளர்க்க முடியாதபோது, யார் அக்குழந்தையை வளர்க்கிறார்களோ அவர்கள் வளர்த்தெடுத்த தாய், தந்தையர் ஆவர். தத்தெடுத்த தாய் தந்தையர்கள் என்பவர்கள், பெற்றெடுத்த தாய் தந்தையர்கள் நிரந்தரமாக, சட்டாரீதியாக பிரிக்கப்பட்டு, யார் குழந்தையை வளர்க்க விரும்புகிறார்களோ, அவர்களிடம் சட்டரீதியாக ஒப்படைப்பது ஆகும். அவ்வாறு ஒப்படைக்கும் முறையினை தத்தெடுப்பு என்கிறோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் திருமண பந்தத்திற்கு வெளியே அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை அடிப்படையில், ஏதாவது ஒரு குழந்தை உருவாகியிருந்தால், மருத்துவத்துறை களப்பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆகையால் திருமண பந்தம் இல்லாமல் பிறக்கும் குழந்தையை அறிந்துகொண்டு, என்ன செய்ய வேண்டும் என்ற நடைமுறை உங்களுக்கு தெரிந்திருந்தால், நீங்கள் பெற்றோரை வழிநடத்துவீர்கள் என்பதால் தான் இந்த அடிப்படை பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது. தத்தெடுக்கக்கூடிய நடைமுறைகள் சரியான விதத்தில் நடைபெற, உங்களது ஒத்துழைப்பு அவசியம். தற்போது பின்பற்றக்கூடிய தத்தெடுப்பு நடைமுறை விதிகள்-2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பல்வேறு சூழல் காரணமாக, குழந்தைகள் வளர்க்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதை காணமுடியும்.

சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் நல்ல முறையில் உணர்வுபூர்வமாக செயல்பட்டு, குழந்தை வேண்டாம் என்று நினைக்கக்கூடிய பெற்றோர்கள் மற்றும் குழந்தை பெற முடியாத நிலையிலிருக்கும் பெற்றோர்கள், குழந்தையை தத்தெடுக்கக்கூடிய சட்டதிட்டங்களை புரிந்துகொண்டு இருபாலர்களும், மகிழ்ச்சியாக இருக்க உங்களால் பணியாற்ற முடியும். தத்தெடுக்கும் சட்டதிட்ட நடைமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை, நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய பெற்றோர்கள் இருக்கிறார்கள். தத்தெடுக்கும் சட்டதிட்டங்கள் என்ன, எப்படிப்பட்டவர்களுக்கு தகுதி இருக்கிறது, என்ன நடைமுறைகளின் அடிப்படையில் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்ற குழந்தைகள் தத்தெடுக்கும் நடைமுறைகளை, சட்ட திட்டங்களை விளக்கமாக எடுத்து கூறினால் சமுதாயத்திலேயே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றார்.

Tags : Social Security Department ,
× RELATED காவல் அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி