×

அலகுமலையில் 2ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு தீவிரம்

திருப்பூர், ஜன.29:  திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. போட்டியை காண பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களை சுழற்சி முறையில் உள்ளே அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி கால்கோள் விழா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகள், துரித கதியில் நடந்து வருகின்றன. பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, 400 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வி.ஐ.பி.க்கள் பகுதி, பொதுமக்கள் பகுதி, பத்திரிக்கையாளர் பகுதி, பரிசு வழங்குமிடம் என தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வையாளர் பகுதிக்குள், காளைகள் நுழையாமல் இருக்க, இருபுறமும் இரும்பு கிரில் பொருத்தப்படுகிறது.

காளைகள் வெளியிலிருந்து வாடிவாசல் வரை வருவதற்கு, இருபுறமும் மரக்கம்புகள் நடப்பட்டு, தனிப்பாதை அமைக்கப்படுகிறது. போட்டியில், அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள், பாதுகாப்பாக வெளியேறவும், அவை தப்பிச்செல்லாமல் பிடிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயம்பட்டால், அவர்களுக்கு அருகிலேயே சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை சேர்ந்த காளைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை வணிக நோக்கில் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ேமலும் இந்த போட்டிக்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- போட்டியை காண பல்வேறு மாவட்டங்களைச்சார்ந்த ஜல்லிக்கட்டு பிரியர்கள் பல ஆயிரக்கணக்கில் வருவதால் அவர்களின் வாகனங்கள் நிறுத்திச்செல்லும் வகையில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படவேண்டும். திருச்சி ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம், திருப்பூர், பல்லடம் ஆகிய இடங்களில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது குறித்து பாதாகைகள் வைக்கப்பட்டு அலகுமலைக்கு பொது மக்கள் வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ குழுவினர்கள், அரசு மருத்துவ மனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர்கள், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர்களுக்கு தனித்தனி கூடாரம் அமைத்து தர வேண்டும். காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி செய்யும் வகையில் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் 10 க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

விழா நடக்கும் தினத்தன்று மாடுபிடி வீரர்கள், வருவாய் துறையினர், கால்நடைத்துறை, அரசு ஆரம்ப சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை ஆகியவற்றில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு  உணவு வசதிகளும், காளைகளுக்கு தண்ணீர் வசதி, தீவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் பரிசுகள் வழங்க வேண்டும். போட்டிகளை காண வரும் பொது மக்களை சுழற்சி முறையில் உள்ளே அனுமதிக்கு வகையில் தனி பாதைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படை வசதிகளை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க நிர்வாகிகள் செய்துள்ளார்களா? என்பதை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்புதான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Jallikattu Competition ,
× RELATED புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி 971 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்