×

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

உடுமலை, ஜன.29:  தென்னை மரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரங்களில் கடந்த 2014ம் ஆண்டு தென் அமெரிக்க நாடுகளில் இருந்து ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது. சுருள் ஈக்கள் முதலில் செவ்விளநீர், வீரிய ஒட்டு ரகம் இளநீர் மரங்களின் தென்னங்கீற்றுகளில் சாரை உறிஞ்சுவதால், மரங்கள் காய்ப்பு இழந்து நின்றன.
தற்போது கீற்றுகள் கருகி நிற்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதை கட்டுப்படுத்த வேளாண்மை துறை பரிந்துரை செய்த மருந்துகள், ஒருங்கிணைந்த முயற்சியின்மையால் பலன் அளிக்கவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில் பெருகி நெட்டை ரக மரங்களிலும் கடுமையாக பரவி தாக்கி வருகிறது. சுருள் ஈ பல்கிப் பெருகி, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களிலும் பரவி உள்ளது. காய்கறிகள், மக்காச்சோளம், சிறுதானிய பயிர்களையும் தாக்கி சாறு உறிஞ்சுவதால், உரிய விளைச்சல் அடையாமல் பயிர்கள் குறுகிவிடுகின்றன. தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த சுருள் வெள்ளை ஈ தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதை பேரிடராக அறிவித்து, அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : fly attack ,south ,
× RELATED கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின்...