×

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

காங்கயம்,  ஜன.29:  திருப்பூர் வடக்கு மாவட்ட  காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காங்கயத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமை  தங்கினார். நகர தலைவர் சிவபக்துல்லா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். இதில் காங்கயம், பல்லடம், அவினாசி உள்ளிட்ட தொகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அரசியலில், பா.ஜ.வும்  ஆர்.எஸ்.எஸ்.சும் தவறான பொருளாதார கலாசாரத்தால் மக்களை பிளவுபடுத்துகிறது.  பா.ஜ. அரசு பொதுத்துறை நிறுவனங்களை விரைவாக  விற்று வருகிறது. இந்திய  ரயில்வேயில் 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களை தனியாருக்கு தரை வார்க்க  விடப்படுகிறது மேலும், ரயில் பராமரிப்பும் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.  மக்கள் குறைவான கட்டணத்தில் பயணம் செய்யும் ரயில்வேயை இது போல் செய்வது  தவறானதாகும். பாரத் பெட்ரோலிய நிறுவனம் என்பது லாபம் தருவது  ஒன்றாகும். இதை தனியாருக்கு விற்பது ஆபத்தானது. அடிப்படை பொருளாதாரத்தை  நாசப்படுத்தும். இது போன்று தொடர்ந்து தவறுகளை மோடி அரசாங்கம் செய்து வருகிறது. குடியுரிமை  சட்டம் தேவையில்லாதது ஒன்று. இப்போதிருக்கும் நிலையில் இந்திய குடிமகன்  என்பதற்கு 31 ஆவணங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது. பா.ஜ. கொண்டு வந்த  ஜி.எஸ்.டி.யால் சாதாரண மக்கள் பொருள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  வாகன உற்பத்தி தொழிற்சாலையில் 4.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்தியாவில்,  மாநில அரசுக்கு நிறைய அதிகாரிகள் உள்ளனர். மாநில அரசாங்கதை மீறி, அந்த  மாநிலத்தில் மத்திய அரசு எதையும் செய்துவிட முடியாது. ஹைட்ரோ கார்பன்  திட்டத்தில் மாநில அரசு நினைத்தால் மத்திய அரசின் தேவையில்லாத இந்த  திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், எடப்பாடி அரசு அதை செய்யாமல்  உள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய, 2  விதமான கருத்துகள் நிலவுகிறது. சமஸ்கிருதத்தை காட்டிலும், தமிழ்  இனிமையான மொழி. நாம் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. தஞ்சை பெருவுடையார்  கோயிலில் தமிழ் முறைப்படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது காங்கிரஸின்  கோரிக்கையாகும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல்  தேதி அறிவித்த பின்னர்தான், மீண்டும் தி.மு.க. உடன் கூட்டணி குறித்தும், சீட்  பங்கீடு குறித்தும் பேச வேண்டும். தி.மு.க. - காங்கிரஸ் உடனான நெருக்கடி  என்பது, நண்பர்கள், குடும்பத்திற்குள் வரும் நெருக்கடி போன்றது இயல்பான  ஒன்றுதானே தவிர வேறு எதுவும் இல்லை.

Tags : Tirupur Northern District ,Congress Working Committee Meeting ,
× RELATED குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு...