×

ஆனைமலையில் மீண்டும் நெல் அறுவடை பணி தீவிரம்

பொள்ளாச்சி, ஜன. 29: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில் மீண்டும் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்று வட்டார பகுதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் சுமார் 6500 ஏக்கரில் ஒவ்வொரு ஆண்டும், முதல் போகம் மற்றும் இரண்டாம் போகம் என அடுத்தடுத்து நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் பெய்த கோடை மழைக்கு பிறகு தென்மேற்கு பருவமழை பெய்ததால், அதனை எதிர்நோக்கி, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழது ஜூலை மாதம்  துவக்கத்திலிருந்து முதல் போக சாகுபடி மேற்கொண்டனர்.
மேலும் அதே மாதத்தில், ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆனைமலை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பலரும் நெல் சாகுபடியை துவங்கினர்.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் ஜூலை மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல் நாற்றானது, கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் நல்ல விளைச்சலடைந்து அறுவடைக்கு தயாரானது.  டிசம்பர்  முதல் வாரத்தில்  நல்ல விளைச்சல் அடைந்த நெல் மணிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த நேரத்தில், வேளாண்துறை மூலம் மானியத்தில் குறைந்த வாடகைக்கு கதிர் அறுக்கும் இயந்திரம் வழங்காததால், தனியாரிடம் இருந்து கூடுதல்  வாடகை கொடுத்து, வரவழைக்கப்பட்டு அறுவடை பணி நடந்தது.

இந்நிலையில், போதிய கூலியாட்கள் இல்லாமலும், அறுவடைக்கு தேவையான இயந்திரம் கிடைக்க பெறாததால் அறுவடை பணி மந்தமானது. சுமார் ஒன்றரை மாதங்களாக 70 சதவீத அறுவடை பணியே நடந்துள்ளது. வேளாண் அதிகாரிகளிடம் கதிர் அறுக்கும் இயந்திரம் கேட்டும் கிடைக்க பெறாததால், விவசாயிகள் வேதனையடைந்தனர். இருப்பினும், நஷ்டத்தை தவிர்க்க இருக்கின்ற நெல்லை விரைந்து அறுவடை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக சில நாட்களுக்கு முன்பு, கூடுதல் வாடகைக்கு அறுவடை இயந்திரம் வரவழைத்து, நெல்லை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  ஆனைமலை பகுதியில் அடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு, ஆழியார் அணையில் இருந்து இப்போதே தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளதால், முதல்போக நெல் சாகுபடியில் உள்ள நெல் அறுவடை பணியை விரைந்து மேற்கொண்டு, அடுத்து இரண்டாம் கட்ட நெல் சாகுபடிக்காக உழவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Anaimalai ,
× RELATED ஊரடங்கு தளர்வால் ஆனைமலை அருகே ரேக்ளா போட்டி