×

கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடையில் பதுக்கிய 316 மதுபாட்டில் பறிமுதல்

பொள்ளாச்சி, ஜன.29: பொள்ளாச்சி அருகே கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய  கடையில் பதுக்கிய 316 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும். அங்கு மது வாங்கி குடித்துவிட்டு செல்வோரால் மக்கள் அவதிப்படுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, பொள்ளாச்சி கலால்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.  இதையடுத்து நேற்று, கோட்ட கலால்துறை அலுவலர் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லப்பம்பாளையம் பிரிவில் உள்ள கடையில் சோதனை நடத்த சென்றனர். அப்போது, அதிகாரிகள் வருவதை அறிந்த கடை உரிமையாளர் சதீஸ் என்பவர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், கடையை ஆய்வு செய்த போது, அங்கு 6 பெட்டிகளில் மொத்தம் 316 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார்  வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி சதீஸை தேடி வருகின்றனர்.

Tags : store ,
× RELATED சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது