×

சிட்டி பேனர் செய்திக்கு.., ஆம்னி பேருந்து நிலையம் இடமாற்றப்படுமா? போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி

கோவை, ஜன.29: கோவை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டும் வரை தற்காலிக இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கோவையும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் வாகனப்  போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன.
அரசு, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற இலகு ரக வாகனங்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இது தவிர, விதி மீறும் வாகன ஓட்டுநர்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, கோவையில் மாலை  முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு  முக்கியக் காரணமாக ஆம்னி பேருந்துகள் உள்ளன.

கோவை-சத்தி சாலையில், காந்திபுரம் அருகில் தற்போது ஆம்னி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, மதுரை நாகர்கோவில், தூத்துக்குடி,  கும்பகோணம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுவனமும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. மேலும், பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கு மட்டுமே இந்த பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகராட்சி விதிகளை மீறி, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்துகளைக் கழுவுவது, பஞ்சர் போடுவது, ரிப்பேர் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பேருந்து ஓட்டுநர்கள் தங்குமிடமாகவும் இது மாறிவிட்டது.

இது தவிர, ஆம்னி பேருந்துகள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றுவதில்லை. ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, காந்திபுரம், லட்சுமி மில்ஸ் என முக்கியப் பகுதிகளில் உள்ள  பேருந்து நிறுத்தங்களின் அருகே நிறுத்தி, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். ஆம்னி  பேருந்துகள் வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும், பெரியதாக உள்ளது. இதனால் ஒரே சாலையில் இரண்டு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து நிறுத்தும்போது, அவ்வழியாக பிற எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு,  நெருக்கடி அதிகரிக்கிறது.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் தொடங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு வர மேலும் சில ஆண்டுகளாகும். அதுவரை ஆம்னி பேருந்து நிலையம், காந்திபுரம் அருகிலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், நெரிசலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் வரை, சத்தி சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தை, வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்றனர்.

Tags : City Banner News Heavy ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்