செல்வபுரத்தில் கட்டிடத்திற்கு விதிகளை மீறி மின் இணைப்பு

கோவை, ஜன. 29:  கோவை மின் பகிர்மானம் மாநகர் வட்டம் மைய கோட்டம் செல்வபுரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்திற்கு விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு மின்வாரிய தலைமை பொறியாளருக்கு நேற்று மனு அளித்தார். மனுவில், கோவை மையக்கோட்டம் செல்வபுரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மாசானி அம்மன் கோவில் அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் இருந்து துடியலூர் வரையிலான 110 கிலோ வாட் மின் திறன் கொண்ட உயரழுத்த மின்கம்பி செல்கிறது.

இந்த உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பாதைக்கு கீழ் உள்ள எந்த கட்டிடத்திற்கும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என மத்திய மின்சார சட்டம் மற்றும் மின் பாதுகாப்பு விதி 2010ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயர் கோபுரத்தின் வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு கீழ் மற்றும் பக்கவாட்டிலும் போதிய இடைவெளி இருக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகரில் பெரும்பாலான பிரிவு அலுவலகத்தில் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை.

செல்வபுரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்திற்கு உயர் மின்னழுத்த கம்பி செல்லும் பாதைக்கு கீழ் உள்ள கட்டிடத்திற்கு இந்த மாதம் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்பாதை செல்வது தெரிந்தே செல்வபுரம் பிரிவு அலுவலர் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தபட்ட பிரிவு அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமீபகாலமாக மின் வாரியத்தில் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது தெரிந்தும் உயர் அலுவலர்கள் கள ஆய்வு செய்யாமல் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: