விவசாயிகளின் நலனுக்காக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

ஈரோடு, ஜன. 29:  ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆசியோடு முறைகேடு நடப்பதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.  ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து பேசினர். இதில் விவசாயிகள் பேசியதாவது:

விவசாயிகள் சான்று பெற கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றால் அங்கு வி.ஏ.ஓ. யாரும் இருப்பதில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் காலை 10 மணியில் இருந்து மதியம் ஒருமணி வரை வி.ஏ.ஓ.க்கள் இருக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இந்த கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊஞ்சலூர் அருகே குப்பாண்டாம்பாளையத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு அருகே ரங்கம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் முட்கள் ரோடு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நெல் கிலோவிற்கு ரூ.25 வழங்க வேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் விவசாயிகளின் நலனுக்காக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்து வருகிறது. 35 கிலோ மூட்டைக்கு அதிகமாக கூலி வாங்கி வருகின்றனர். இதுபற்றி கேட்டால் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கப்பம் கட்ட வேண்டி உள்ளது என வெளிப்படையாக கூறுகின்றனர். மேலும் வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி வந்து, கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும்போது விவசாயிகள் சான்று வழங்க வேண்டும். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வியாபாரிகளுக்கும் சான்று வழங்குகின்றனர். இது முறைகேட்டிற்கு வழிவகுக்கிறது.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கூலி தொகையை நிர்ணயம் செய்து அதுதொடர்பான விபரங்களை தகவல் பலகை வைத்து தெரிவிக்க வேண்டும். கூலி தொகையை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். மொடக்குறிச்சி வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார்கள். இந்த இறைச்சி கடையை குடியிருப்பு இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். மரவள்ளி கிழங்கு ஏற்றும் லாரிகளுக்கு எடைஅளவு உச்சவரம்பை நீக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். கிராம ஊராட்சிகளின் பெயரிலேயே கிராமத்தின் பெயர் அரசு பதிவேட்டில் இருக்க உத்தரவிட வேண்டும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பகல் முழுவதும் நடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 60 வேலம்பாளையம் பகுதியில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியின்போது கொப்பு வாய்க்காலை சேதப்படுத்தியுள்ளனர். இந்த கொப்பு வாய்க்காலை சீரமைக்க வேண்டும். பழனிகவுண்டன்பாளையத்தில் பழுதடைந்துள்ள பாலத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசூர்-சோளசிராமணி பேரேஜ் பகுதியில் போடப்பட்ட ரோடுகள் முறையாக அமைக்காததால், அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் மீதமுள்ள பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகுகளையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மாசிலாமணி, விவசாய சங்க பிரதிநிதிகள் பெரியசாமி, வேலாயுதம், சுதந்திரராசு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>