துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மண் பரிசோதனை

ஈரோடு,  ஜன. 29:  ஈரோட்டில் துப்புரவு பணியாளர்களுக்கு 840 வீடுகள் கொண்ட  அடுக்குமாடி கட்ட நேற்று மண் பரிசோதனை நடந்தது. அப்போது 3 டி.எஸ்.பி  தலைமையில் 200 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

 ஈரோடு மாநகராட்சி 53வது வார்டு முனிசிபல் சத்திரத்தில்  உள்ளது. இங்கு துப்புரவு பணியாளர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து  வருகின்றனர். இதில், அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் தனித்தனி வீடுகள்  அமைத்துள்ளனர். இந்நிலையில், முனிசிபல் சத்திரம் பகுதியில் துப்புரவு  பணியாளர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.  ஆனால், அப்பகுதியை சேர்ந்த சிலர் அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்,  எங்கள் நிலத்திற்கு பட்டா கொடுங்கள் அல்லது தனித்தனி வீடுகள் கட்டி தர  வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் 840 வீடுகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்திற்கு அரசு  ரூ.75 கோடி கடந்த ஆண்டு நிதி ஒதுக்கியது. இதனைத்தொடர்ந்து அடுக்குமாடி  குடியிருப்பு கட்ட முனிசிபல் சத்திரம் பகுதியில் நேற்று காலை சுமார் 7  மணிக்கு மண் பரிசோதனை துவங்கியது. இந்த மண்பரிசோதனை குடிசைமாற்று வாரிய  செயற்பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
Advertising
Advertising

இதில், மாநகராட்சி உதவி  கமிஷனர்கள் சண்முகவடிவு, உதவி செயற்பொறியாளர் அசோகன் உட்பட பல அதிகாரிகள்  உடன் இருந்தனர். முன்னதாக, குடிசை மாற்று வாரியத்தின் மண் பரிசோதனைக்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என உளவுத்துறை  தெரிவித்திருந்ததால், அசாம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஈரோடு டவுன்  டி.எஸ்.பி ராஜூ, ஆயுதப்படை டி.எஸ்.பி சேகர், டிராபிக் டி.எஸ்.பி  எட்டியப்பன் ஆகியோர் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண் பரிசோதனை நடக்கும்  இடத்திற்கு வந்த பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பினை கட்ட எதிர்ப்பு  தெரிவித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில்  இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டாம், நாங்கள்  குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கொடுக்க வேண்டும். அதேபோல், வீடு  கட்டினால் தனித்தனி வீடுகளாக கட்டி தர வேண்டும் என தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேசியதாவது: உங்களது கோரிக்கை ஏதுவாக  இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளியுங்கள் நடவடிக்கை எடுப்பார்.  

நாங்கள் தற்போது மண் பரிசோதனைக்கு தான் வந்துள்ளோம், எங்களது பணியை  தடுக்காதீர்கள் என்றனர். பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மண் பரிசோதனை  துவங்குவதற்கு முன்பாகவே, அதிகாலை 5.30 மணிக்கே முனிசிபல் சத்திரம் முதல்  மரப்பாலம் வரை குடியிருப்பு பகுதிகளுக்குள் போலீசார் குவிந்திருந்ததால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து பொதுநல பணியாளர்கள்  சங்க (தொமுச) மாவட்ட பொதுசெயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: முனிசிபல்  சத்திரம் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஈரோடு மாவட்டம் தனியாக  பிரிப்பதற்கு முன்பாக இருந்து துப்புரவு பணியாளர்கள் இங்கு வசித்து  வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஈரோடு  நகராட்சியாக இருந்தபோது, அப்போது துப்புரவு பணியாளர்களாக இருந்த சுமார் 180  பேருக்கு அவர்களது சம்பள பணத்திலேயே வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்களது வாரிசுகள் அதே வீட்டில் வசித்து வருகின்றனர்.  எங்கள் பகுதி மக்களின் பொதுகோரிக்கையே இங்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும்  அவர்களது வாரிசுகள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு தனி பட்டா வழங்க  வேண்டும், அல்லது 50சதவீத பங்களிப்புடன் அரசு தனி வீடு கட்டி தர வேண்டும்  என்பது தான். இது தொடர்பாக பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம்.  ஆனால், எங்களது கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இது  தொடர்பாக  மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் எங்களது கோரிக்கை தொடர்பாக முறையிட  உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.    தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய  செயற்பொறியாளர் வெங்கடேசன் கூறியதாவது: முனிசிபல் சத்திரம் பகுதியில்  துப்புரவு பணியாளர்கள் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில்  குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள்  கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த நிதியை கடந்தாண்டே  அரசு ஒதுக்கி விட்டது. தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இங்கு மண்  பரிசோதனை (சாயில்) நடக்கிறது. இந்த ஆய்வின் அறிக்கையின்படி இந்த பகுதியில்  எத்தனை அடுக்குமாடி கட்ட வேண்டும் என முடிவு செய்யப்படும். இங்கு  கட்டப்படும் வீடுகள் அனைத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு மட்டும் தான்  ஒதுக்கீடு செய்யப்படும், என்றார்.

Related Stories: