ஈமு கோழி மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் பிப். மாதம் இறுதிக்குள் புகார் அளிக்கலாம்

ஈரோடு,  ஜன. 29:   ஈமு கோழி மோசடியில் பாதிக்கப்பட்ட மக்கள் பிப். மாதம் இறுதிக்குள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபியை தலைமையிடமாக கொண்டு கச்சேரி மேட்டில்  என்.எஸ்.அக்ரோ பார்மஸ் என்ற பெயரில் ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் கடந்த  2011ம் ஆண்டு முதல் செயல்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு  செய்தால், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கவர்ச்சிகரமான  விளம்பரம் செய்து, விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் லட்சக்கணக்கில்  முதலீடுகளை பெற்று, பல கோடி ரூபாயை மோசடி செய்தனர். இது தொடர்பாக ஈரோடு  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்தின்  உரிமையாளர்களான சுரேஷ், அவரது தந்தை நடராஜன், சுதந்திரதேவி உள்ளிட்ட  5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

 இந்த வழக்கு தொடர்பாக 392 புகார்கள் மீது  விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை கோவையில் உள்ள தமிழ்நாடு  முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்)  தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில்,  அந்நிறுவனத்திற்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா  சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், என்.எஸ். அக்ரோ பார்ம்ஸ்  நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அந்நிறுவனத்தில்  முதலீடுகளை செலுத்தியுள்ளதாக டான்பிட் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.  இதைத்தொடர்ந்து டான்பிட் நீதிபதி, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு  போலீசார், அந்நிறுவனத்தில் முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்ட

மக்களின் அனைவரது  புகாரையும் மீண்டும் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (29ம் தேதி)  முதல் பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார்களை பெற உள்ளனர்.

இது குறித்து ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நர்மதாதேவி கூறியதாவது:

என்.எஸ்.  அக்ரோ நிறுவனத்தில் முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக 392 புகார்கள் மீது  விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு  நீதிமன்றத்தில் உள்ளது. ஆனால், தற்போது இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட  மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், டான்பிட் நீதிமன்ற  உத்தரவின் பேரில், இதுவரை புகார் அளிக்காத முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்ட  மக்களிடம் புகார் 29ம் தேதி (இன்று) முதல் பெறப்படுகிறது. பாதிக்கப்பட்ட  மக்கள் பிப். மாத இறுதிக்குள் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்கும்  மக்கள், என்.எஸ் அக்ரோ நிறுவனத்தில் முதலீடு செலுத்தியதற்கான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள பொருளாதார  குற்றப்பிரிவு போலீசில் நேரில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: