சுமைதூக்கும் தொழிலாளர்கள் பேரணி

ஈரோடு, ஜன. 29:   ஈரோடு மாவட்ட அனைத்து சுமைதூக்குவோர் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இருந்து கோரிக்கை பேரணி துவங்கியது. இந்த பேரணி நிகழ்ச்சிக்கு டி.பி.டி.எஸ் சுமைதூக்குவோர் சங்க தலைவர் மனோகரன், பாட்டாளி சுமைதூக்குவோர் சங்க கௌரவ தலைவர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஈரோடு வ.உ.சி.பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி சத்திரோடு, புது மஜீத் வீதி, மார்க்கெட் வீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, காமராஜ் வீதி வழியாக தெப்பக்குளம் வீதியில் நிறைவடைந்தது. பேரணியில் சி.ஐ.டி.யு சுமை பணியாளர் சங்க நிறுவன தலைவர் மாரிமுத்து, மாவட்ட சுமை பணியாளர் சங்க தலைவர் தங்கவேல், மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார், பாட்டாளி சுமைதூக்குவோர் சங்க தலைவர் முனியப்பன், தர்மலிங்கம், செல்வம், ரங்கநாதன், மாது (எ) மாதையன் உட்பட பல்வேறு சுமைதூக்குவோர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினேசிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகரில் லாரி வர்த்தக நிறுவனங்கள், எண்ணெய் ஆலைகள், மஞ்சள் மண்டிகள், காய்கறி சந்தைகள், கட்டிட பொருள் விற்பனை நிலையங்கள், தோல் பதனிடும் ஆலைகள் என பல்வேறு நிறுவனங்களுக்கு வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம். 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி பெற்று வருகிறோம். இந்த நிலையில் துணி வணிக நிறுவனங்களில் வழக்கமாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று எங்கள் நிறுவன வேலையை எங்கள் இஷ்டம் போல யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்து கொள்கிறோம் என நீதிமன்றத்தில் உறுத்துகட்டளை மற்றும் தீர்ப்பு வாங்கியுள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் போடப்பட்ட ஸ்டேட்டஸ் கோ ஒப்பந்தத்திற்கு வணிகர்களின் நடவடிக்கை எதிராக உள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: