சி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக நாளை மனிதசங்கிலி போராட்டம்

ஈரோடு, ஜன. 29: சி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக ஈரோட்டில் நாளை 30ம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனித சங்கிலி போராட்ட ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தினால் நாட்டில் ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதோடு கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த சட்டத்திற்கு முன்னோட்டமாக தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சி.ஏ.ஏ அமல்படுத்தக்கூடாது என்று நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோட்டில் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் காந்தி நினைவு தினமான நாளை (30ம் தேதி) மாலை 3 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி மைதானத்தில் துவங்கும் இப்போராட்டம் கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற உள்ளது. மேலும் போராட்டத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு நிலவன் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: