புதுவையில் பரபரப்பு நவீன மீன் அங்காடியில் பெண் வியாபாரிகள் மோதல்

புதுச்சேரி,  ஜன. 29: புதுச்சேரி லாஸ்பேட்டை நவீன மீன் அங்காடியில் பெண் வியாபாரிகள்  மோதலில் ஈடுபட்டு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. புதுவை வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோயில்  வீதியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி லதா (42). இவர் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வியாபாரம் செய்து  வருகிறார். கடந்த சில நாட்களாக தன்னிடம் மீன் வாங்கும் பொதுமக்களிடம், அந்த  மீன்களையும் அவரே சுத்தம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு மீன்களை சுத்தம் செய்து  கொடுப்பதற்காக அங்கு தனி பிரிவாக செயல்படும் பெண்களில் சிலர் எதிர்ப்பு  தெரிவித்தனர். இதையடுத்து லதா தனது தங்கையையும் மறுநாள் அங்கு அழைத்து  வந்து மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபடவே, பாதிக்கப்பட்ட மீனவ  பெண்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி நிர்வாக அதிகாரியான  மணிகண்டனிடம் மீன்களை சுத்தம் செய்யும் பெண்கள் முறையிட்டனர்.  இதையடுத்து லதாவை கண்டித்த அதிகாரிகள், அவரது கடை அமைந்துள்ள நுழைவு வாயிலை  ஒருமணி நேரம் இழுத்து மூடி பூட்டு போட முயன்றனர். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த லதா அங்கிருந்த அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மீன் சுத்தம் செய்து கொடுக்க சரியாக யாரும் இங்கு வருவது கிடையாது.

இதனால்  எங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானதால்தான் நாங்களே அந்த பணியை  செய்து எங்களது பிழைப்பை நடத்தி வருகிறோம். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை  ஒருதலைபட்சமானது என்றார். இருப்பினும் அனுமதியில்லாத தங்கையை  வெளியேற்றும் வரை ஒருமணி நேரம் கடை நடத்த தடைவிதித்து பூட்டு போட  முயற்சிக்கவே, அதை வலுக்கட்டாயமாக அவர் தடுத்துள்ளார். இதில் பூட்டின்  முகப்பு பகுதி உரசி லதாவின் கையை லேசாக கிழித்தது. இதில் காயமடைந்த அவர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் சம்பவ  இடத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம்  ஏற்படவே தகவல் கிடைத்து வந்த கோரிமேடு போலீசார் மீனவ பெண்களை எச்சரித்து  அனுப்பினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: