×

புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க ஜிப்மர் மறுப்பு

புதுச்சேரி, ஜன. 29:  புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்ய தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:  புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அமைந்தது முதல் புதிய நியமனம் என்பதே இல்லை. தனியார் நிறுவனங்கள் தொடங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதும் இல்லை.  மேலும் தனியார் தொழிற்சாலைகள் ரவுடிகளின் அட்டகாசத்தால் மூடப்பட்டு வருகிறது. அரசின் நிர்வாக சீர்கேட்டால் அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அரிதாகிவிட்டது. இந்நிலையில் ஜிப்மரில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு நியமனம் நடக்கவுள்ள அறிவிப்பு வெளியானது. அதிலும் புதுச்சேரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் இல்லை. ஆகையால், புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 80 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை காலிப்பணியிடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்க வேண்டும், இல்லையெனில் இட ஒதுக்கீடு கேட்டு மேற்கொள்ளும் போராட்டங்களுக்கும் மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து பங்கேற்கும் என்று ஜிப்மர் இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதற்கு ஜிப்மர் நிர்வாகம் பதில் அளித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கடந்த 2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ள மசோதாவின்படி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஜிப்மர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. அச்சட்டப்படி மத்திய இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஜிப்மருக்கு உள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ஜிப்மர் பின்பற்றி வருகிறது. அந்த சட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த உத்தரவும், விதிகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது கூட்டப்படவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஜிப்மரில் புதுச்சேரி இளைஞர்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வைத்திலிங்கம் எம்பி., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு என்.ஆர். காங்கிரசால் வழங்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உறுதுணையாக இருந்து, ஜிப்மரில் 80 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரி இளைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டசபையிலும் இது தொடர்பான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Jibmer ,residents ,Puducherry ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்