×

பல மாதங்களாக தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு

விருத்தாசலம், ஜன. 29: விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவடவாடி ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சாரம், கழிவுநீர் வாய்க்கால், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் மற்றும் மழை காலங்களில் பெய்யும் மழை நீர் ஆகியவை தெருவிலேயே தேங்கி நிற்கிறது. கடந்த மாதத்தில் பெய்த மழை நீர் மற்றும் சாக்கடை நீர் தெருவிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த நீரில் புழுக்கள் மற்றும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கழிவுநீர் வெளியே செல்லாதபடி கழிவுநீர் வாய்க்கால் வசதியில்லாததால் நீர் முழுவதும் சாலையிலேயே தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் அந்த சாக்கடை நீரில் துர்நாற்றம் வீசி வருகிறது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அந்த சாலையின் வழியே நடந்தும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் சென்று விருத்தாசலம் மெயின் ரோட்டை அடைந்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அங்கு தேங்கியுள்ள சாக்கடை மற்றும் மழைநீரை அகற்றவும், தெருவில் சாக்கடை நீர் தேங்காதபடி கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு