சங்கரன்கோவிலில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளால் ஆபத்து அபாயம்

சங்கரன்கோவில், ஜன. 28: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட  சங்குபுரம் 3 மற்றும் 4ம் தெரு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலி இடமாக கிடந்த பகுதியாகும். தற்போது இந்த பகுதி பல வீடுகளுடன் புதிய குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. நிலங்கள் காலியாக இருந்த போது மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த வயர்கள் மிகவும் தாழ்வாக இருந்தன. தற்போது இந்த பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதியாக மாறி உள்ளதால் இந்த மின்கம்பங்கள் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் மிகவும் ஆபத்தான உயரத்தில் தொங்குகின்றன.சங்குபுரம் 3ம் தெருவின் நடுவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இந்த மின்கம்பத்தை கடந்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. இப்பகுதியில் பள்ளிக்கூடங்களும் அமைந்துள்ளதால் தாழ்வான மின் கம்பியால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து மின்கம்பங்களை முறையாக மாற்றியமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: