×

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இழுத்தடிப்பு தூத்துக்குடியில் இன்சூரன்ஸ் நிறுவனம் முற்றுகை

தூத்துக்குடி,ஜன.28:  தூத்துக்குடியில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மெத்தனபோக்கை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் 2018-2019ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள 1.10 லட்சம் மக்காசோளம் விவசாயிகளுக்கு தற்போது ஓதுக்கீடு செய்யப்பட்டு, வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகை விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை பெற வேண்டி தூத்துக்குடி மாவட்ட மக்காசோள விவசாயிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பாண்டியன் கிராம வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த ஆண்டு முதல் பாண்டியன் கிராம வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கணக்கு வைத்துள்ள விவசாயிகள் தங்களது புதிய வங்கி கணக்கு எண்ணை சமர்பிக்கவேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் தான் இந்த பணி நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு மொத்தமாக வந்தால் டோக்கன் வழங்கப்படும் என்றும், அவர்களிடம் இருந்து புதிய வங்கி கணக்கு எண் பெறப்பட்டு, அப்லோடு செய்யப்பட்டு, அதன் பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி எப்போது நிறைவடைந்து தாங்கள் எப்போது நிவாரண தொகை பெறுவது என கூறி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வந்த விவசாயிகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டவுன் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விவசாயிகளிடமும், நிறுவன அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு