×

பாகூர் அருகே சோரியாங்குப்பம் ஆற்று புதரில் பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்

பாகூர், ஜன. 28: புதுவை பாகூர் அருகே சோரியாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுவை பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் அவ்வப்போது மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு வரப்பட்டு மறைவான பகுதியில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனை தடுக்கும் வகையில் பாகூர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மணல் திருடி வந்த மினி லாரியை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடிக்கொண்டு சோரியாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் மறைவான இடத்தில் குவியல், குவியலாக பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 4 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் பட்டியலை தயாரித்து, அவர்கள்  மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Sooriyanguppam ,Bagur ,river bush ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்