மரக்காணம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

மரக்காணம், ஜன. 28: மரக்காணம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி இசிஆர் சாலை வழியாக நேற்று அதிகாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வல்லத்தம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைத்தடு மாறிய பேருந்து, மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவர்கள் கூச்சல்போடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் பேருந்து கவிழ்ந்தவுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Marakkanam ,
× RELATED பழைய - புதிய பஸ் நிலையம் இடையே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க வேண்டும்