நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம், ஜன. 28: நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சத்தியமங்கலம் கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மசூதிதெரு, பாளைத்தெரு, செட்டித்தெரு என சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடும்பஅட்டை, ஆதார்கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர் ஆதாரத்தை பெருக்குவோம் என்ற பேரில் 180 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாங்கள் நீர்ஆதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில்தான் வாழ்ந்து வருகிறோம். அப்படியிருக்க பல ஆண்டுகளுக்குப் பிறகு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குடியிருக்கும் இடத்தை காலி செய்தால் அரசு வழங்கிய அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆதரவற்ற எங்களுக்கு அரசு மட்டுமே உதவிசெய்யும் என்ற நோக்கில் வாழ்ந்துவருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நல்லதொரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: