×

அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனம் மோசடி கலெக்டரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்

தேனி, ஜன. 28: தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதிகவட்டி, வீட்டுமனை இடம் என ஆசைவார்த்தை கூறி ஏராளமானவர்களிடம்  மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டோர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தேனி நகரை சேர்ந்த லட்சுமி என்பவருடன் ஏராளமானோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.இம்மனுவில், தெரிவித்திருந்ததாவது, தேனி நகரில் பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகே செயல்பட்ட ஜெயம் பெயரிலான ஒரு  தனியார் நிதிநிறுவனம், தங்கள் நிதி நிறுவனத்தில்  உறுப்பினர்களாக சேர்ந்து தொடர்ந்து மாதம் ரூ.100 முதல் ரூ.1000 வரை பணம் செலுத்தினால் 5 வருடம் கழித்து இரட்டிப்பு பணத்துடன் வீட்டுமனையிடம் வழங்கப்படும் என குடியிருப்பு பகுதிகளில் சென்று ஆசை வார்த்தை தெரிவித்தனர்.

இதனைநம்பிய பெண்கள் இந்நிறுவனத்தில் மாதம் ரூ.100 முதல் ரூ.1 ஆயிரம் வரை கடந்த 2011ம் ஆண்டு முதல் செலுத்தினர். 5 ஆண்டு கழித்தபிறகு, முதிர்வுத் தொகை கேட்டபோது, இந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து தேனி போலீசில் புகார் அளித்தும் பலனில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு நிதி நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரவர் கட்டியத் தொகையை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். இவரைப்போல தேனி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேரிடம் நிதி நிறுவனம் நிதி வசூலித்து மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம்
தெரிவித்துள்ளனர்.

Tags : Victims ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...