×

சர்வதேச தரச்சான்றிதழ் பெற நாளை விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை, ஜன.28:  சர்வதேச தரச்சான்றிதழ்கள் மானியம் மூலம் பெற விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கையில் நாளை(ஜன.29) நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ஐஎஸ்ஓ 9001/ ஐஎஸ்ஓ 14001உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு செலுத்தும் கட்டணத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை மானியமாக அளிக்கப்படும். இந்நிதியாண்டில்(2019-2020) இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடையே மேற்படி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாளை, காலை 10 மணிக்கு சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் மகாலில் விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 04575 240257என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Awareness meeting ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்