திருமங்கலம் அருகே நூலகத்தில் இயங்கும் பஞ்சாயத்து அலுவலகம் சொந்த கட்டிடம் கட்டுவது எப்போது?

திருமங்கலம், ஜன. 28: திருமங்கலம் அருகே, காண்டை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால், அங்குள்ள நூலகத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடித்தது. இதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் பஞ்சாயத்து அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு தலைவர்கள், வார்டு உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், திருமங்கலம் அருகே, காண்டை கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் நூலகத்தில் இயங்கி வருகிறது. திருமங்கலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் சேதமடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கட்டிதரப்படவில்லை. இதனால், ஊரில் உள்ள நூலகத்தை பஞ்சாயத்து அலுவலகமாக மாற்றி, அங்கு பணி செய்து வந்தனர்.

இந்தநிலையில், சமீபத்தில் புதிய தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் காண்டை பஞ்சாயத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களும் நூலகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். நூலகம் என்பதால் புதிய பஞ்சாயத்து தலைவர் பொறுப்பேற்ற பின்பு அலுவலகத்தில் பெயிண்ட் அடிக்காமல் பொலிவிழந்து காணப்படுகிறது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் தவமணி முருகனிடம் கேட்டபோது பஞ்சாயத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுவரையில் நூலகத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது’ என்றார். நூலகம் பஞ்சாயத்து அலுவலகமாக மாறியுள்ளதால் காண்டை கிராமத்திற்கு நூலகம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. கிராமத்து இளைஞர்கள், படித்தவர்களுக்கு வேதனையை அளித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவில் காண்டை கிராமத்திற்கு புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை கட்டி நூலகத்தை வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: