×

மதுரை பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் ‘வாடிய’ செவ்வந்தி கிலோ ரூ.10க்கு விற்பனை

மதுரை, ஜன. 28: மதுரை பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் செவ்வந்தி பூவின் விலை சரிந்து, கிலோ ரூ.10க்கு நேற்று விற்பனையானது. மதுரை பூ மார்க்கெட்டிற்கு தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு விருகின்றன. இந்நிலையில், செவ்வந்தி பூவின் வரத்து நேற்று அதிகரித்து, விலை குறைந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது. இது குறித்து பூ வியாபாரி சுந்தர் கூறுகையில், ‘கடந்த வாரம் கிலோ ரூ.400க்கு விற்று வந்த நிலையில், திடீரென செவ்வந்தி பூக்கள் வரத்து அதிகரித்து, விலை குறைந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, கூடலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துரை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. விலை போகாத நிலையில், அறுப்பு கூலியை கூட பெற முடியாத நஷ்டத்தில் பூ விவசாயிகள் திரும்பிச் சென்றனர்.

சிலர் கீழே கொட்டிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. செவ்வந்தி பூக்கள் விலை தொடர்ந்து குறைந்திருக்கும் நிலையில், மாசி மாதம்தான் ஓரளவு விலை உயரும்’’ என்றார். மதுரை பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்கள் விலை (கிலோவில்) விபரம் வருமாறு: மல்லிகை ரூ.1400, கலர் பிச்சி ரூ.900, முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.100, மாட்டுச் செவ்வந்தி ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.300 கோழிக்கொண்டை ரூ.40, சம்பங்கி ரூ.90, துளசி ரூ.40 அருகம்புல் ரூ.30, மரிக்கொழுந்து ரூ. 60 மற்றும் தாமரை ஒரு பூ ரூ.6, மனோரஞ்சிதம் ஒரு பூ ரூ.5.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...