உதவித்தொகைக்கு மனு கொடுக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை, ஜன. 28: மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஒத்தவீட்டை சேர்ந்த குடும்பன் மனைவி மாயாக்காள் (85), கணவர் இறந்த நிலையில், ஆதரவின்றி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உதவித்தொகைக்கு மனு கொடுக்க நேற்று வந்த மாயக்காள், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓடி வந்து மூதாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை தெளிய வைத்தனர். பின்னர் அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். பின்பு மூதாட்டியின் கோரிக்கை குறித்து, மக்கள் குறைதீர் முகாமில் அதிகாரியிடம் நேரில் சென்று போலீசார் தெரிவித்தனர்.

இதனை கேள்விபட்ட தாசில்தார் சிவக்குமார், துணைதாசில்தார் முத்துலெட்சுமி ஆகியோர் மூதாட்டியிடம் நேரில் வந்து விசாரித்தனர். அவர்களிடம் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக்கூறி மூதாட்டி அழுதார். பின்பு, தாசில்தார், துணை தாசில்தார் ஒருமனுவை வாங்கி வந்து, பெயர், முகவரி ஆகியவற்றை அவர்களே எழுதி தயாரித்து, மூதாட்டியிடம் கைநாட்டு வாங்கினர். உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். வீட்டுக்கு செல்லுங்கள் என கூறி அனுப்பிவைத்தனர். ஓர் ஆட்டோவில் மூதாட்டியை ஏற்றி, பெரியார் பஸ்நிலையத்தில் கருமாத்தூர் பஸ்சில் ஏற்றிவிடுமாறு ஆட்டோ டிரைவரிடம் சொல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கான செலவு தொகையை வழங்கினர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>