குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதில் இருதரப்பு மோதல் 58 பேர் மீது வழக்கு உசிலை அருகே பரபரப்பு

உசிலம்பட்டி, ஜன. 28: உசிலம்பட்டி அருகே, குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதில் இருபிரிவினரிடம் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உசிலம்பட்டி அருகே, எம்.பாறைப்பட்டி கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஜாக்காபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராபால்ராஜ், ஒன்றியக் கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி, 4வது வார்டு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தேசிய கொடியை யார் ஏற்றுவது என்ற பிரச்னையில் சித்ரா பால்ராஜ் தலைமையில் ஒரு பிரிவினரும், 4வது வார்டு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் ஒரு பிரிவினரும் தகராறில் ஈடுபட்டனர். இதனால், இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தோரணக் கொடிகளை அறுத்தெறிந்தனர். மேலும் இருதரப்பினரும் ஊரிலும் மோதிக் கொண்டனர்.

இதில் பெரியகருப்பன், ஆசைபிரபு, பேச்சியம்மாள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி, சித்ராபால்ராஜ், பெரியகருப்பன், ஆசைபிரபு உட்பட 21 பேர் மீது எழுமலை போலீசில் மணிமாறன் புகார் கொடுத்தார். இதேபோல் மணிமாறன், முத்தையா, ஈஸ்வரன் உட்பட 16 பேர் மீது அய்யங்காளை மகன் பெரியகருப்பன் புகார் கொடுத்தார். மேலும் ராஜக்காபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராபால்ராஜ் 21 பேர் மீது நேற்று புகார் கொடுத்தார். இது குறித்து 58 பேர் மீது எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: