திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் அங்கன்வாடி, பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் இல்லை

திருப்பரங்குன்றம், ஜன. 28: திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினமும் மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டையானது வாரத்தில் ஏதாவது இரண்டு நாட்களில்  பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள  பள்ளிகளுக்கு  முட்டை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும்  இதனால் மாணவர்களுக்கு  முறையாக முட்டை கிடைப்பதில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், சப்ளை ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கான பில் வழங்குவதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றால் வாரத்தில் இரண்டு நாட்கள் மொத்தமாக சப்ளை  செய்யப்பட்டு வந்த முட்டையானது  தற்போது ஒரு நாள் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு இடத்திற்கு உரிய நேரத்தில் முட்டை கொண்டு செல்லப்படாமல் ஏதாவது ஒரு இடத்தில் மொத்தமாக அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்கன்வாடி உள்ளிட்ட சிலர் முட்டைகளை சில கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி மீண்டும் அவர்களது இடத்திற்கு கொண்டு செல்வதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. முட்டைகளை பத்திரமாக பள்ளி வரை கொண்டு செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: