தோல் உறியும் நோயால் பாதிக்கப்பட்ட அக்கா, தம்பி சிகிச்சைக்கு நிதியுதவி கோரி கலெக்டரிடம் மனு

மதுரை, ஜன. 28:  மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மணப்பை மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது மூத்த மகள் பேச்சியம்மள் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். மகன் சாமுவேல் (9), 4ம் வகுப்பு படிக்கிறான். இவர்கள் இருவரது உடல் தோல் மிகவும் மெல்லியதாக உள்ளது. யாராவது  அதிக அழுத்தத்துடன் தொட்டால், அவர்கள் தோல் உறிந்து ரத்தம் வெளியேறும். செருப்பு போட்டு நடந்தாலும் தோல் உறியும். அதே போன்று, இவர்களை அதிக அழுத்தத்துடன்  உரசினால், தோல் உறிந்து ரத்தம் வரும். மற்ற குழந்தைகள் போல் இவர்களால் வெளியே விளையாடவோ, ஓடவோ முடியாது. இருவரையும் பெற்றோர் பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமடையவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் கிராமத்துக்கு சென்ற கலெக்டர் வினயிடம் இருவரும் தங்களது உடல் நிலை குறித்து தெரிவித்து சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டனர். இதற்கு அவர், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்படியும். மதுரை அரசு மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கா, தம்பி இருவரும் பெற்றோருடன் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.  பின்பு தங்களின் மேல் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யும்படி  கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து,  நடவடிக்கை எடுக்கும்படி மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

இது குறித்து இருவரும் கூறுகையில், ‘தோல் உறியும் விநோத நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள், ஓடினாலோ, கீழே விழுந்தாலோ தோலுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், தோல் உறிந்துவிடும். அப்போது ரத்தம் வருகிறது. அந்த காயம் குணமாக நாளாகிறது. இவ்வாறு உடல் முழுவதும் தோல் உறிந்து, ரத்தக் காயம் உள்ளது. பெற்றோர் கூலித்தொழில் செய்வதால், மேல்சிகிச்சை செய்ய பண வசதி இல்லை. இதனால். மேல் சிகிச்சைக்காக நிதி கேட்டு கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர். 

Related Stories:

>