நெல் விளைச்சல் செழிக்க மருதாநதி அணை மீண்டும் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்டிவீரன்பட்டி, ஜன. 28: பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் விளைச்சல் செழிக்க மருதாநதி அணை தண்ணீரை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளைத்தில் உள்ளது மருதாநதி அணை. இந்த அணையின் மூலம் பழைய பாசனத்தில் 2358 ஏக்கர் நிலங்கள், புதிய பாசனத்தில் 4151 ஏக்கர் நிலங்கள் என 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் 53 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தாமரைக்குளம், கருங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்களை நிரப்பி, அதன்மூலம் பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி, அய்யம்பாளையம் கால்பரவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை நிலங்கள் இருந்தும் அதில் பாதியளவில்தான் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பகுதியில் கோ 51, கோ 43, கோ 45 ஆகிய மூன்று நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் கோ 43, கோ 45 ஆகிய ரகங்கள் 120 நாட்களில் விளையும். கோ 51 ரகம் 130 நாட்களில் விளையும். நெல் பயிரிட்டு தற்போது 40 நாட்கள் ஆகிறது.

இன்னும் 60 நாட்களுக்கு நெற்பயிருக்கு தண்ணீர் வேண்டும். வெயில் அதிகமாக அடிப்பதால் குளத்தில் உள்ள தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. இதனால் கிணறு மூலமாக தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். கடந்த மாதம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமரைகுளம் வரை வந்து நின்று விட்டது. கருங்குளம், ரெங்கசமுத்திரம் குளங்களுக்கு வரவில்லை. தற்போது நெற்பயிர்கள் செழித்து வளரும் நிலையில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெல்லூரை சேர்ந்த விவசாயி வடிவேல் கூறியதாவது, ‘சென்ற வருடம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பயிரிட்டதில் பாதி நிலங்களில் தான் விளைச்சல் வந்தது. இதனால் இந்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டவில்லை. நெல் நாற்று நடவு, நிலத்தை உழுதல், உரம் என ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகின்றது. தற்போது 40 நாட்களில் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. அணையிலிருந்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் விளைச்சல் இந்த வருடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விளைச்சல் அதிகரித்தால்தான் நெல் பயிரிட்ட விவசாயிகளும், பயிரிடாத நெல் விவசாயிகளும் அடுத்த வருடம் நெல் பயிரிட ஆர்வம் காட்டுவார்கள். இதன்மூலம் நெல் விளைச்சலை அதிகரிக்கலாம்’ என்றார்.

Related Stories: