சின்னாளபட்டியில் 2 மணிநேரம் தொடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் சாதனை

திண்டுக்கல், ஜன. 28: சின்னாளபட்டி ராஜன் விளையாட்டரங்கில் உலக சாதனைக்காக நடத்தப்பட்ட போட்டியில் மாணவ, மாணவிகள் 2 மணிநேரம் ெதாடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டு அசத்தினர். சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டரங்கில் ரோலர் ஸ்கேட்டிங், டேக் வாண்டோ, கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் உரிமையாளர் மாஸ்டர் பிரேம்நாத் டோக்வாண்டோ, ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கு உலக நடுவராக உள்ளார்.இந்நிலையில் இங்கு உலக அளவிலான ஸ்கேட்டிங் சாதனை போட்டிகள் நடைபெற்றது. அமெரிக்கன் புக் ஆப் ரெக்கார்டு, அப்பிசியல் வேல்டு ரெக்கார்டு, யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு உலக நடுவர் பிரேம்நாத் தலைமை வகிக்க, கேரள மாநிலத்தை சேர்ந்த நடுவர் ஷாஜி முன்னிலை வகித்தார்.

போட்டியை காந்திகிராமம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராம் துவக்கி வைத்தார். 5 வயது முதல் 15 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் காலை 8.30 மணிக்கு துவங்கி ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பின்னர் 10.30 மணியளவில் போட்டியை நிறுத்தினர். இந்த 2 மணிநேரமும் மாணவ, மாணவிகள் நிற்காமல் அங்கில் வட்டமடித்து கொண்டே இருந்தனர். மாணவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக மனதை ஒருநிலைப்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், கலையரசன், சக்திவேல், மரியதாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. காந்திகிராமம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை, கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். 2 மணிநேரம் அயராமல் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories: