சுடுகாடு அமைத்துதரகோரி நரிக்குறவர் இன மக்கள் சாலைமறியல்

துறையூர், ஜன.28: துறையூரில் நரிக்குறவர் இன மக்களுக்கு தனியாக சுடுகாடு அமைத்து தரக்கோரி துறையூர்- முசிறி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர்-முசிறி பிரிவு சாலை அருகே நரிக்குறவர் இன மக்களுக்காக தனியாக காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு வசதி இல்லை என கூறுகின்றனர். தங்கள் இனமக்கள் இறந்தால் 2 கிலோ மீட்டர் தொலைவில் பிரேதத்தை தூக்கி சென்று உடல்தகனம் செய்ய வேண்டும். ஏற்கனவே புதைக்கப்பட்ட பிரேத இடத்தில் குழிதோண்டி தற்போது இறந்தவர்களின் உடலை புதைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தங்களின் காலனி பகுதிக்கு அருகிலேயே புதிதாக சுடுகாடு அமைத்துத்தர இப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 32 வருடங்களாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு சுடுகாடு பிரச்சினைக்காக பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். புதைக்கபட்ட இடத்திலேயே புதைத்ததால் அதில் எலும்புகள் அதிகமாக இருப்பதால் 2அடி ஆழத்தில் உடல்களை புதைக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் துறையூர்- முசிறி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறை உதவி ஆய்வாளர் குமார் நரிக்குறவர் இன மக்களிடம் உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததின்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முசிறி-நாமக்கல் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: