×

பயிற்சி முகாமில் அறிவுறுத்தல் கோட்டூர் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

மன்னார்குடி, ஜன. 28: கோட்டூர் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கலைச்செல்வன் என்பவர் தலைமையாசிரியராகவும், கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆய்வக உதவியாளராகவும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். ஆய்வக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கு அடிக்கடி தாமதாக வருவ தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி இயங்கியது. அப்போது கிருஷ்ணமூர்த்தி காலதாமதாக வந்தார். இதனை தலைமையாசிரியர் கலைச்செல்வன் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. இதனையறிந்த பள்ளி மாணவர்கள் ஆய்வக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையாசிரியரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பள்ளியை விட்டு வெளியேறினர். ஆசிரியர்கள் சிலர் சமாதானம் செய்தும் அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் சங்கு முத்தையா பள்ளிக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க படுமென அவர் மாணவர்களிடம் உறுதியளித்தார். அதனை ஏற்ற மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு அவரவர் வகுப்புகளுக்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் கோட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Training Camp ,Government School Lab Assistant ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்