தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மாநகரை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பயணம்

தஞ்சை, ஜன. 28: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மாநகரை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாநகரை தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். இதையடுத்து புதிய பேருந்து நிலைய பகுதியில் குப்பைகளை அகற்றி அவற்றை சாக்கு பையில் சேகரித்து அப்புறப்படுத்தினார்.

Advertising
Advertising

தூய்மையை வலியுறுத்தி நடத்திய இந்த விழிப்புணர்வு பயணம் புதுக்கோட்டை சாலை வழியாக ராஜராஜன் மணிமண்டபம் வரை நடந்தது. நடைப்பயணத்தின்போது மக்கும் குப்பை, மக்கா குப்பை தனித்தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். நகரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டுமென பொதுமக்களிடம் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்துரைத்தார்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கவின்மிகு தஞ்சை உறுப்பினர்கள், இன்னர்வீல் சங்க உறுப்பினர்கள், தஞ்சை குடிமக்கள் குழும உறுப்பினர்கள், ஆர்.ஆர்.நகர் மற்றும் சரபோஜி கல்லூரி நடைப்பயிற்சியாளர்கள், சரபோஜி கல்லூரி மாணவர்கள், மாநகர துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: