அக்கரைப்பூண்டி குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்

பாபநாசம், ஜன. 28: அக்கரைப்பூண்டி குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அடுத்த சருக்கைக்கு செல்லும் வழியில் கபிஸ்தலம் ஊராட்சியை சேர்ந்த அக்கரைப்பூண்டி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குளத்தின் தூய்மை கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்புவதுடன் காம்பவுன்ட் சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், குளத்தை தூர்வாரி படித்துறை அமைத்து காம்பவுன்ட் சுவர் எழுப்ப வேண்டும். இந்த குளத்தில் நிரம்பும் நீரால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதையும் மீறி குப்பையை குளத்தில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: